Thursday, 2 April 2015

கோதுமை இடியாப்பம்




கோதுமை இடியாப்பம்,எல்லோரும் சாப்பிட்டிருப்பீர்கள்,எங்களுக்கு மிகவும் பிடித்த சிற்றுண்டி.எளிமையாக செய்யக்கூடியது.

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த,சத்தான ஆகாரம் இது  !!!!  

சுவையான,வாசனையான கோதுமை இடியாப்பம் சாப்பிடலாமா ?????



செய்முறை:

கோதுமையை வாணலியில் வறுத்து,ஆறியபின் மிஷினில் கொடுத்து மாவாக்கி,சலித்து  வைத்துக்கொள்ளவும்.


தேவையான அளவு மாவை எடுத்து,உப்பு போட்டு சுடுதண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு போல(கொஞ்சம் தளர்வாக பிசைந்தால் இடியாப்பம் பிழிய எளிமையாக இருக்கும்) பிசைந்து கொள்ளவும்.மாவு பிசையும் போதே நல்லா வாசனையாக இருக்கும்.


இடியாப்பத் தட்டில் எண்ணெய் தடவி, இடியாப்ப உரலில் மாவை வைத்து தட்டில் பிழிந்து,இட்லி பாத்திரத்தில் வைத்து வேக விடவும். வேகும் போதும்,வாசனை கமகமக்கும்.





இடியாப்பம் வெந்தவுடன் தேங்காய் துருவல்,நெய்,சர்க்கரை போட்டு சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.
வாழைப்பழம்,தேங்காய் துருவல் சேர்த்தும் சாப்பிடலாம்.



குறிப்பு :
கோதுமை வறுக்கும் போது,பொன்னிறமாக வறுக்கவும்(கருக்கி விடக்கூடாது )

வாணலியில் வறுத்து,மிஷினில் கொடுத்து மாவாக்கி,சலித்து  வைத்துக்கொண்டால் எப்போ வேண்டுமானாலும் இடியாப்பம் செய்யலாம்.





Saturday, 7 March 2015

சோளப்பணியாரம்



சோள அரிசி பற்றிய குறிப்புகளில்  சில,

சோளத்தில் உடலுக்கு தேவையான ஆற்றல், புரதம், உயிர் சத்துகள் மற்றும் தாது உப்புகள் அதிக அளவில் இருக்கின்றன. 
அரிசி சார்ந்த உணவை விடசோள உணவு சத்துள்ள உணவாக கருதப்படுகிறது. 
மேலும் சோளம் இதய நோய்கள், ரத்த கொதிப்பு மற்றும் நீரிழிவு நோய் வருவதையும் குறைக்கும்.

இத்தகைய சத்தான சோள அரிசியை வைத்து சுவையான  பணியாரம் செய்யலாமா?????

தேவையான பொருட்கள்:
பச்சரிசி -1கப்
புழுங்கல் அரிசி -1கப்
வெள்ளை சோள அரிசி -1கப்
உளுந்து -1/4கப்
உப்பு -தே.அளவு
கருவேப்பிலை -1/4கைப்பிடி(நறுக்கியது)
கொத்தமல்லி -1/4(நறுக்கியது )

தாளிக்க :
எண்ணெய் -1மே.கரண்டி
கடுகு -1/4தே.கரண்டி
உளுந்து -1/4தே.கரண்டி
பச்சைமிளகாய்-2(நறுக்கியது)
பெரிய வெங்காயம் -1(பொடியாக நறுக்கியது)

செய்முறை:

அரிசி,சோளம்,உளுந்து ஆகியவற்றை  3மணி நேரம் ஊறவைத்து, நைசாக அரைத்து உப்பு  சேர்த்து கரைத்து வைக்கவும்.



அடுத்த நாள் மாவுடன் ,தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து சேர்த்து,கருவேப்பிலை,கொத்தமல்லி போட்டு நன்றாக கலக்கவும்.



பணியாரச்சட்டியில் எண்ணெய் தடவி சட்டி காய்ந்தவுடன் மாவை ஊற்றவும்.

எண்ணெய் விட்டு வேகவிடவும்.(அடுப்பை மிதமான தீயில் வைத்து)

திருப்பி விட்டு  மறுபுறமும் வேகவிடவும்.



இருபுறமும் வெந்தவுடன் எடுக்கவும்.

சுவையான சோளப்பணியாரத்தை  தக்காளி சட்னியுடன் சாப்பிடவும்.




வாழ்க வளமுடன் ...







Friday, 20 February 2015

வாழைப்பூ குழம்பு


இந்த குழம்பு எங்க வீட்ல ரொம்ப பிடிக்கும்....அடிக்கடி செய்வேன்//
அது எப்படினு உங்களுக்கும் சொல்றேன்....

வாழைப்பூ பிரிக்கும் போது பெரிய,நடுத்தர,சிறிய பூக்களை பிரித்து,அதில் நடுத்தர,சிறு பூவை வைத்து இந்த குழம்பு செய்தா நல்லா இருக்கும்,பெரிய பூவை எடுத்து சுத்தம் செய்து வைங்க,அதுக்கு இன்னொரு ரெசிபி தயாரா இருக்கு அத செய்யலாம் ஓகே வா ...



தேவையான பொருட்கள் :
வேக வைத்த வாழைப்பூ -1கப்
வெங்காயம்(சிறியது )-18
தக்காளி -1கப் 
பூண்டு -10
பச்சை மிளகாய் -1
கருவேப்பிலை -1/2பிடி 
வெந்தயம் -1/4தே .கரண்டி 
சோம்பு -1தே.கரண்டி 
மசாலாப்பொடி(மிளகாய்&மல்லிகலந்தபொடி)-2மே.கரண்டி
(காரத்திற்கேற்ப சேர்த்து கொள்ளவும்)
மஞ்சள்பொடி-1/4தே.கரண்டி
உப்பு -தே.அளவு
எண்ணெய் -தாளிக்க தே .அளவு
நல்லெண்ணெய் -1மே .கரண்டி



செய்முறை :
வாழைப்பூவை சுத்தம் செய்து,உப்பு சேர்த்து குக்கரில் 3விசில்விட்டு  வேகவைத்து,தண்ணீரை வடிகட்டி பூவை எடுத்து வைக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு வெந்தயம்,சோம்பு போட்டு பொரிந்தவுடன் கருவேப்பிலை, கீறிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி வெங்காயம்,பூண்டு(முழுசா) போட்டு நன்கு வதக்கவும்.

பிறகு தக்காளி சேர்த்து வதக்கி (தக்காளி நன்கு வதங்கி கூழ் போல வர வேண்டும்),பின்பு வேக வைத்துள்ள வாழைப்பூ சேர்த்து 5நிமிடம் கிளறவும்.


இப்பொழுது மசாலாப்பொடி,மஞ்சள் பொடி,உப்பு சேர்த்து 3நிமிடம் கிளறி,1+1/2 கப் தண்ணீர் விட்டு கொதி வந்தவுடன் அடுப்பை மிதமான தீயில் வைத்து நல்லெண்ணெய் சேர்த்து 15நிமிடம் கொதிக்க விட்டு(மிதமானதீயில்)எண்ணெய் பிரிந்து வந்தவுடன் இறக்கவும்.




சாதத்திற்கு,தோசைக்கு இந்த வாழைப்பூ குழம்பு சூப்பராக இருக்கும்.

குறிப்பு :
புளிப்பு சுவைகொஞ்சம் அதிகம்  தேவைப்பட்டால்,பெருநெல்லிஅளவு புளியை கெட்டியாக கரைத்து,நல்லெண்ணெய் விட்டவுடன் புளிக்கரைசலை சேர்த்து
எண்ணெய் பிரிந்தவுடன் இறக்கவும்.

வாழ்க வளமுடன் ...