தேவையான பொருட்கள் : கோதுமை மாவு (வறுத்த கோதுமையில் அரைத்த மாவு,கோதுமை இடியாப்பம் செய்முறையில் அதை வறுக்கும் முறை கூறியுள்ளேன் ) உப்பு சர்க்கரை தேங்காய்த் துருவல்
செய்முறை: கோதுமை மாவில் உப்பு சேர்த்து,சுடுதண்ணீர் விட்டு,இடியாப்பத்திற்கு போல பிசைந்து கொள்ளவும்.
அந்த மாவை சிறிது எடுத்து உருண்டை உருட்டி,தட்டிக்கொள்ளவும் (புகைப்படத்தில் உள்ளது போல)
அதில் சர்க்கரை,தேங்காய்த்துருவல் வைத்து தட்டியதை மடக்கி ஓரங்களை மூடி விடவும்.
இதை இட்லி பாத்திரத்தில் வைத்து வேகவிடவும். சூடா ஆவி பறக்க கோதுமை கொழுக்கட்டை ரெடி .....
பசங்களுக்கெல்லாம் விடுமுறை தினமான இப்பொழுது மாலை நேரத்தில் ஏதாவது ஸ்நாக்ஸ் செய்யணுமா??? சத்தான,சுவையான,எளிமையான, வித்தியாசமான இந்த கொழுக்கட்டை செய்து கொடுங்க..... குறிப்பு : இதை வறுத்த கோதுமையில் அரைத்த மாவில் தான் செய்ய வேண்டும். இந்த மாவு அரைத்து வச்சுகிட்டா எப்போ வேண்டுமானாலும் இடியாப்பம்,கொழுக்கட்டை செய்து சாப்பிடலாம். வாழ்க வளமுடன்....
தேவையான பொருட்கள்: பிரண்டை -2 கட்டு புளி - 2 பெரிய நெல்லிக்காய் அளவு (புளியை தண்ணீரில் கெட்டியாக கரைத்து புளிச்சாறு எடுத்து வைக்கவும்) மசாலாப்பொடி(மல்லி &மிளகாய் கலந்த பொடி)-காரத்திற்கு( 3 மே.கரண்டி சேர்த்துள்ளேன்) உப்பு -தே.அளவு தாளிக்க : நல்லெண்ணெய் -2குழிக்கரண்டி வெந்தயம் -1தே.கரண்டி கருவேப்பிலை -தாளிக்க தே.அளவு சின்ன வெங்காயம்-1கப் பூண்டு -1கப் தக்காளி -3 (நறுக்கியது) அரைக்க: தேங்காய் -1/2கப்(கொஞ்சம் போட்டாலே போதும்) சோம்பு -1தே.கரண்டி சின்னவெங்காயம்-6
செய்முறை: பிரண்டையை மேல் தோல் எடுத்துட்டு சுத்தம் செய்து கட் பண்ணி வைக்கவும்.
தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து,பிரண்டையை போட்டு நன்கு வதக்கவும்.(பிரண்டையை நல்லா வதக்கினால் தான் நாக்கில் அரிப்பு வராது,பிரண்டை வதக்கும் போது நிறம் மாறும்)
பின் மசாலாப்பொடி சேர்த்து 1/2நிமிடம் வதக்கி,உப்பு,மஞ்சள்தூள் போட்டு,அரைத்த தேங்காய் கலவை சேர்த்து 1நிமிடம் வதக்கி,புளிக்கரைசல் சேர்த்து நன்கு கலக்கிவிடவும்.
கொதி வந்தவுடன் மிதமான தீயில் வைத்து பிரண்டை வேகவிடவும். பச்சை வாசனை போய், எண்ணெய் பிரிந்து, பிரண்டை வெந்தவுடன் கொத்தமல்லி தூவி இறக்கவும். சூடான சாதம்,இட்லி,தோசை ஆகியவற்றிக்கு பிரண்டைக்குழம்பு சூப்பராக இருக்கும்.மறுநாள் வைத்து சாப்பிட இன்னும் சுவையாக இருக்கும்.
கோதுமை இடியாப்பம்,எல்லோரும் சாப்பிட்டிருப்பீர்கள்,எங்களுக்கு மிகவும் பிடித்த சிற்றுண்டி.எளிமையாக செய்யக்கூடியது. குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த,சத்தான ஆகாரம் இது !!!! சுவையான,வாசனையான கோதுமை இடியாப்பம் சாப்பிடலாமா ?????
செய்முறை: கோதுமையை வாணலியில் வறுத்து,ஆறியபின் மிஷினில் கொடுத்து மாவாக்கி,சலித்து வைத்துக்கொள்ளவும்.
தேவையான அளவு மாவை எடுத்து,உப்பு போட்டு சுடுதண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு போல(கொஞ்சம் தளர்வாக பிசைந்தால் இடியாப்பம் பிழிய எளிமையாக இருக்கும்) பிசைந்து கொள்ளவும்.மாவு பிசையும் போதே நல்லா வாசனையாக இருக்கும்.
இடியாப்பத் தட்டில் எண்ணெய் தடவி, இடியாப்ப உரலில் மாவை வைத்து தட்டில் பிழிந்து,இட்லி பாத்திரத்தில் வைத்து வேக விடவும். வேகும் போதும்,வாசனை கமகமக்கும்.
இடியாப்பம் வெந்தவுடன் தேங்காய் துருவல்,நெய்,சர்க்கரை போட்டு சாப்பிட்டால் அருமையாக இருக்கும். வாழைப்பழம்,தேங்காய் துருவல் சேர்த்தும் சாப்பிடலாம்.
குறிப்பு : கோதுமை வறுக்கும் போது,பொன்னிறமாக வறுக்கவும்(கருக்கி விடக்கூடாது ) வாணலியில் வறுத்து,மிஷினில் கொடுத்து மாவாக்கி,சலித்து வைத்துக்கொண்டால் எப்போ வேண்டுமானாலும் இடியாப்பம் செய்யலாம்.