Wednesday, 15 April 2015

பிரண்டைக்குழம்பு









தேவையான பொருட்கள்:
பிரண்டை -2 கட்டு
புளி - 2 பெரிய நெல்லிக்காய் அளவு (புளியை  தண்ணீரில் கெட்டியாக கரைத்து புளிச்சாறு எடுத்து வைக்கவும்)
மசாலாப்பொடி(மல்லி &மிளகாய் கலந்த பொடி)-காரத்திற்கு( 3 மே.கரண்டி சேர்த்துள்ளேன்) 
உப்பு -தே.அளவு

தாளிக்க :

நல்லெண்ணெய் -2குழிக்கரண்டி
வெந்தயம் -1தே.கரண்டி
கருவேப்பிலை -தாளிக்க தே.அளவு
சின்ன வெங்காயம்-1கப்
பூண்டு -1கப்
தக்காளி -3 (நறுக்கியது)


அரைக்க:

தேங்காய் -1/2கப்(கொஞ்சம் போட்டாலே போதும்)
சோம்பு -1தே.கரண்டி
சின்னவெங்காயம்-6



செய்முறை:

பிரண்டையை  மேல் தோல் எடுத்துட்டு சுத்தம் செய்து கட் பண்ணி வைக்கவும்.


தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து,பிரண்டையை போட்டு நன்கு வதக்கவும்.(பிரண்டையை  நல்லா வதக்கினால் தான் நாக்கில் அரிப்பு வராது,பிரண்டை வதக்கும் போது  நிறம் மாறும்)







பின் மசாலாப்பொடி சேர்த்து 1/2நிமிடம் வதக்கி,உப்பு,மஞ்சள்தூள் போட்டு,அரைத்த தேங்காய் கலவை சேர்த்து 1நிமிடம் வதக்கி,புளிக்கரைசல் சேர்த்து நன்கு கலக்கிவிடவும்.




கொதி வந்தவுடன் மிதமான தீயில் வைத்து பிரண்டை வேகவிடவும்.


பச்சை வாசனை போய், எண்ணெய் பிரிந்து, பிரண்டை வெந்தவுடன்

கொத்தமல்லி தூவி  இறக்கவும்.

சூடான சாதம்,இட்லி,தோசை ஆகியவற்றிக்கு பிரண்டைக்குழம்பு சூப்பராக இருக்கும்.மறுநாள் வைத்து சாப்பிட இன்னும் சுவையாக இருக்கும்.




குறிப்பு:
பிரண்டை சீக்கிரம் வெந்துவிடும், வேகும் பதம் தெரியலையினா ,
புளிக்கரைசல் சேர்த்து கொதி வந்தவுடன் குக்கரில் 1விசில் வைக்கவும்.


பிரண்டை பற்றிய பயனுள்ள  தகவல் 


                                                                                                                      நன்றி - Peppers TV
வாழ்க வளமுடன்.....

Thursday, 2 April 2015

கோதுமை இடியாப்பம்




கோதுமை இடியாப்பம்,எல்லோரும் சாப்பிட்டிருப்பீர்கள்,எங்களுக்கு மிகவும் பிடித்த சிற்றுண்டி.எளிமையாக செய்யக்கூடியது.

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த,சத்தான ஆகாரம் இது  !!!!  

சுவையான,வாசனையான கோதுமை இடியாப்பம் சாப்பிடலாமா ?????



செய்முறை:

கோதுமையை வாணலியில் வறுத்து,ஆறியபின் மிஷினில் கொடுத்து மாவாக்கி,சலித்து  வைத்துக்கொள்ளவும்.


தேவையான அளவு மாவை எடுத்து,உப்பு போட்டு சுடுதண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு போல(கொஞ்சம் தளர்வாக பிசைந்தால் இடியாப்பம் பிழிய எளிமையாக இருக்கும்) பிசைந்து கொள்ளவும்.மாவு பிசையும் போதே நல்லா வாசனையாக இருக்கும்.


இடியாப்பத் தட்டில் எண்ணெய் தடவி, இடியாப்ப உரலில் மாவை வைத்து தட்டில் பிழிந்து,இட்லி பாத்திரத்தில் வைத்து வேக விடவும். வேகும் போதும்,வாசனை கமகமக்கும்.





இடியாப்பம் வெந்தவுடன் தேங்காய் துருவல்,நெய்,சர்க்கரை போட்டு சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.
வாழைப்பழம்,தேங்காய் துருவல் சேர்த்தும் சாப்பிடலாம்.



குறிப்பு :
கோதுமை வறுக்கும் போது,பொன்னிறமாக வறுக்கவும்(கருக்கி விடக்கூடாது )

வாணலியில் வறுத்து,மிஷினில் கொடுத்து மாவாக்கி,சலித்து  வைத்துக்கொண்டால் எப்போ வேண்டுமானாலும் இடியாப்பம் செய்யலாம்.





Saturday, 7 March 2015

சோளப்பணியாரம்



சோள அரிசி பற்றிய குறிப்புகளில்  சில,

சோளத்தில் உடலுக்கு தேவையான ஆற்றல், புரதம், உயிர் சத்துகள் மற்றும் தாது உப்புகள் அதிக அளவில் இருக்கின்றன. 
அரிசி சார்ந்த உணவை விடசோள உணவு சத்துள்ள உணவாக கருதப்படுகிறது. 
மேலும் சோளம் இதய நோய்கள், ரத்த கொதிப்பு மற்றும் நீரிழிவு நோய் வருவதையும் குறைக்கும்.

இத்தகைய சத்தான சோள அரிசியை வைத்து சுவையான  பணியாரம் செய்யலாமா?????

தேவையான பொருட்கள்:
பச்சரிசி -1கப்
புழுங்கல் அரிசி -1கப்
வெள்ளை சோள அரிசி -1கப்
உளுந்து -1/4கப்
உப்பு -தே.அளவு
கருவேப்பிலை -1/4கைப்பிடி(நறுக்கியது)
கொத்தமல்லி -1/4(நறுக்கியது )

தாளிக்க :
எண்ணெய் -1மே.கரண்டி
கடுகு -1/4தே.கரண்டி
உளுந்து -1/4தே.கரண்டி
பச்சைமிளகாய்-2(நறுக்கியது)
பெரிய வெங்காயம் -1(பொடியாக நறுக்கியது)

செய்முறை:

அரிசி,சோளம்,உளுந்து ஆகியவற்றை  3மணி நேரம் ஊறவைத்து, நைசாக அரைத்து உப்பு  சேர்த்து கரைத்து வைக்கவும்.



அடுத்த நாள் மாவுடன் ,தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து சேர்த்து,கருவேப்பிலை,கொத்தமல்லி போட்டு நன்றாக கலக்கவும்.



பணியாரச்சட்டியில் எண்ணெய் தடவி சட்டி காய்ந்தவுடன் மாவை ஊற்றவும்.

எண்ணெய் விட்டு வேகவிடவும்.(அடுப்பை மிதமான தீயில் வைத்து)

திருப்பி விட்டு  மறுபுறமும் வேகவிடவும்.



இருபுறமும் வெந்தவுடன் எடுக்கவும்.

சுவையான சோளப்பணியாரத்தை  தக்காளி சட்னியுடன் சாப்பிடவும்.




வாழ்க வளமுடன் ...